மிகத்தொன்மையான பாரம்பரியத்தைக்கொண்ட தமிழ் முன்னோர்கள் மருத்துவ பயன்பாடு மற்றும் நீண்ட ஆழமான சிந்தனையின் வெளிப்பாடாக பல ஆபரணங்களை தங்கத்தில் உருவாக்கி அவற்றை அணிவதற்கு எம்மை வழி நடத்தினார்கள் என்றால் அது மிகையாகாது.
இதனால் தமிழர் சமுதாயம் தமது வளமான வாழ்விற்கு மேலும் வளம் சேர்க்கும் முகமாக தங்க ஆபரணங்களை அணிந்து மகிழ்ந்தது.
மூக்குத்தி ஆபரணத்தைப் பெரும்பாலும் இந்துப் பெண்கள் மற்றும் இஸ்லாமியப் பெண்கள் ஆகியோர் அதிகமாக அணிந்தார்கள் என்பதை பழைய இலக்கியங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளமுடியும். மேலும் பழைய இலக்கியங்களில் இருந்து பெண்கள் மூக்கின் நடுவில் அணிந்த ஆபரணமாக 'முல்லாக்கு' எனப்படும் ஆபரணம் தொடர்பான செய்தியும் எமக்குக் கிடைக்கிறது.
பொதுவாக அக்காலத்துப் பெண்கள் இரு புறமும் மூக்குத்தியை அணிந்ததுடன் பெண்களுக்கு சிறு வயதில் மூக்கு குத்தும் விழாவையும் மிகச்சிறப்பாக நடாத்தினார்கள். அதற்கான பிரதான காரணம் பெண்களின் மூக்கு மிக மிருதுவாக இருக்கும் போது மூக்கு குத்துவதற்கு மிக இலகுவாக இருக்கும் என்பதே.
தற்போதைய பெரும்பாலான பெண்கள் மூக்குத்தி அணிவதில்லை. சிலர் நாகரிகம் கருதி தற்காலிக செயற்கை மூக்குத்திகளை விழாக்களுக்கு மாத்திரம் அணிகிறார்கள். பரத நாட்டிய மங்கைகள் தமது நாட்டியத்தில் மாத்திரம் இந்த முல்லாக்கு எனப்படும் மூக்குத்தியை அணிகிறார்கள்.
பழைய காலத்தில் முல்லாக்கு ஆபரணம் என்பது வைரம், முத்து, பவளம், புஸ்பராகம் போன்ற நவமணிகள் இழைத்து உருவாக்கப்பட்டதுடன் பெண்களின் மூக்குக்குக் கீழே அழகிய உதடுகளுக்கு சற்று மேலே கவர்ச்சியாக கொவ்வை இதழ்களுக்கு அர்த்தம் கொடுத்ததாக கவிஞர்கள் வர்ணிக்கிறார்கள்.
மேலும் முல்லாக்கின் சிறப்பை சிவப்பிரகாச சுவாமிகள் பிரபுலிங்கலீலையில் மிகத்தெளிவாகக் குறிப்பிடுகிறார். அதில் வருகின்ற மாயை என்ற பெண் மிக அழகானவள். அவளின் அழகிற்கு ஈடுஇணையே இல்லை எனலாம். அழகு என்ற சொல்லுக்கே அர்த்தம் கொடுப்பவள். அவ்வளவு சிறப்புப் பொருந்திய அவளுடைய பற்கள் முத்துப்போன்றவையல்ல எனவும் முத்துக்கள் அவள் பற்களைப்போன்றவை எனவும் சிவப்பிரகாச சுவாமிகள் கூறுகிறார்.
அவ்வளவு பெருமைமிக்க அவள் தனது மூக்கில் முல்லாக்கு அணிந்திருந்த காட்சி அவருக்கு இவ்வாறு தோன்றுகிறாதாம். அவள் அணிந்திருந்த முல்லாக்கில் உள்ள முத்து அவள் பற்களின் அழகில் வெட்கித் தலைகுனிந்து அவள் வீட்டு முற்றத்திலேயே மனமுடைந்து தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பதைப்போல அவருக்குத் தோன்றுகிறதாம்.
திருமணம் எனும் புனிதமான பந்தத்தில் இணையும் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும் எனும் நடைமுறை அக்காலத்தில் இருந்துள்ளது. அதன் சிறப்பை நாம் ஆராய்ந்தபோது இரண்டு விடைகள் எமக்குக் கிடைத்தன.
சுமங்கலிப் பெண்கள் மூக்குத்தி அணியும்போது அவர்களின் முகத்துக்கு ஒரு பொலிவு கிடைப்பதுடன் அவர்களின் முகம் இலட்சுமிகரமாக இருக்கும்.
நாம் ஆக்ஸிஜனை சுவாசித்து கார்பன்-டை- ஆக்ஸைடு வெளியேற்றுகிறோம். எனவே கணவன், மனைவி கலவி கொள்ளும்போது அவர்களின் மூச்சுக்காற்று கலக்கும் சந்தர்ப்பங்களில் மூச்சுக்காற்றில் உள்ள விஷத்தன்மையை முறிக்கும் சக்தி தங்கத்துக்கு உண்டு. எனவேதான் பழங்காலத்தில் இல்வாழ்க்கை வாழும் பெண்கள் மாத்திரம்மூக்குத்தி அணிவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
தமிழ் நாட்டு மகளிர் மூக்குத்தி, முல்லாக்கு போன்றவற்றை அணிந்திருந்தார்கள் என பல இலக்கியங்கள் சுவைபட எடுத்துரைக்கின்றன.
'மூக்கெழுந்த முத்துடையார் அணிவகுக்கும் நன்னகர மூதூர்வீதி' என்ற திருக்குற்றால குறவஞ்சி வரியில் முத்துமூக்குத்தி அணிந்த இளமங்கையர்கள் பற்றி திருக்கூடராசப்ப கவிராயர் அழகாகக் கூறுகிறார். தமிழில் உருவாக்கப்பட்ட பிரபந்தங்கள் 96 என்பதுடன் அதில் உலாவும் ஒன்றாகும். திருவெங்கை உலாவில் முக்காரம் எனும் சொல் மூக்கு ஆபரணத்திற்காக பயன்படுத்தப்பட்டதை நாம் அறிகிறோம்.
எனவே நம் முன்னோர்களின் கூர்த்த மதி மூலம் மருத்துவ பயன்பாடு கருதியும் கலாசாரம், பண்பாடு காரணமாகவும் தங்கத்தில் நவமணிகள் பதிக்கப்பட்ட பல ஆபரணங்களை அணிவதற்கு நாம் வழிநடத்தப்பட்டோம். அவற்றில் மூக்குத்தியும் ஒன்று என்பதுடன் அவர்களின் வழித்தடம் மாறாமல் நாமும் செல்வோம்.

No comments:
Post a Comment