பார்வையாளர்கள்

Wednesday, December 8, 2010

அன்பு எங்கே?


"நம் மீது அன்பு காட்டும் ஒருவர், நம் அருகில் இருக்கும் சமயத்தில் நாம் அவரை விட சிறந்த ஒருவரை தேடக் கூடாது."

தமிழ்ப் பள்ளி ஒன்றில், ஆசிரியர் நன்னெறிக் கல்விப் பாடத்தை போதித்துக் கொண்டிருந்தார். அன்பு சம்பந்தப்பட்ட தலைப்பை பற்றி விவாதித்த சமயத்தில், வகுப்பிலிருந்த மாணவன் சந்தேகத்துடன் ஒரு கேள்வியை எழுப்பினான்.

மாணவன்: ஐயா, நம் மீது அதிகப் பாசம் கொண்டவரை நாம் எப்படி அடையாளம் கண்டு கொள்வது? அதே சமயம் எவ்வாறு அவர்களின் பாசம் நீடிக்கும்படி செய்வது?

ஆசிரியர்: உண்மையான பாசத்தை நீ அறிந்து கொள்ள விரும்புகிறாயா? சரி, முதலில் நான் சொல்வதைச் செய். பிறகு அதன் அர்த்தத்தை புரிந்து கொள்வாய்.

மாணவன்: சொல்லுங்கள் ஐயா, செய்கிறேன்.

ஆசிரியர்: நம் பள்ளித் திடலுக்குச் செல். அங்கு இருக்கும் புற்களை கீழ்நோக்கிப் பார்த்தவாறே நட. அதில் மிக அழகாகக் காட்சியளிக்கும் ஒரு புல்லைத் தேர்வு செய்து கொண்டு வா. ஆனால், நீ நடந்து முடிந்த பாதையை திரும்பிப் பார்க்க கூடாது. உன் முன்னால் இருக்கும் புல்லை மட்டுமே தேர்வு செய்து என்னிடம் கொண்டு வர வேண்டும்.

மீண்டும் வகுப்பறைக்குள் நுழைந்த அந்த மாணவனின் கையில் எந்த ஒரு புல்லும் எடுத்து வரவில்லை.

ஆசிரியர்: நான் கொண்டு வரச் சொன்ன புல் எங்கே?

மாணவன்: நான் புற்களைப் பார்த்தவாறு நடந்து கொண்டிருந்தேன். என் கண்களில் நிறைய அழகான புற்கள் தென்பட்டன. ஆனால், நீங்கள் கேட்டதோ மிக அழகான புல். ஆகையால், நான் தொடர்ந்து நடந்தேன். பின்னாலிருந்த புற்கள் சில அழகாக இருந்தன. ஆனால், நிபந்தனைப்படி நான் பின்னோக்கிப் பார்க்கக் கூடாது. இறுதியில் என்னால் எந்தப் புல்லையும் தேர்வு செய்ய முடியாமல் போனது.

ஆசிரியர்: அதுதான் நீ கேட்ட கேள்விக்கான பதில்.

நம் மீது அன்பு காட்டும் ஒருவர், நம் அருகில் இருக்கும் சமயத்தில் நாம் அவரை விட சிறந்த ஒருவரை தேடக் கூடாது. அவர்களின் பாசத்தை மரியாதை செய்ய வேண்டும். வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்துப் பாசத்தை எடை போட கூடாது. இறந்த காலத்தை நாம் சரி செய்ய இயலாது. நம்மோடு நிகழ்காலத்தில் இருப்பவரோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் சரிசெய்து கொள்ள முடியும். நம் மீது அன்பு செலுத்தப் பலர் இருந்தாலும், நிகழ்காலத்தில் இருப்பவரே சிறந்தவர். நம் வாழ்க்கையின் சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டு நம் மீது பாசம் காட்டுபவர்க்கு, நேர்மையாக நடந்து கொள்வதே சிறந்த குணமாகும்.

No comments:

Post a Comment